இலங்கைப் படைகளுக்கு அமெரிக்கா மீண்டும் பயிற்சி

சிறிலங்கா படையினருக்கு மீண்டும் அமெரிக்கா பயிற்சியளிக்க ஆரம்பித்துள்ளது. இதனை வரவேற்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, அவர்களுக்கு மேலதிக பயிற்சி வாய்ப்புகளை வழங்குமாறு, அமெரிக்காவிடம் கோரியுள்ளார்.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் நீதித்துறைக் குழுவின் தலைவரான பொப் குட்லட் தலைமையிலான எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்றுமாலை சிறிலங்கா அதிபர் மைத்தரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேசினர். இதன் போதே, சிறிலங்கா அதிபர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நடந்த இந்தச் சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட, அமெரிக்க நாடாளுமன்ற நீதித்துறைக் குழுவின் தலைவரான பொப் குட்லட், சிறிலங்கா அரசாங்கம் ஜனநாயகம், தனிநபர் சுதந்திரம், நல்லிணக்கத்தை வலுப்படுத்துள்ள எடுத்துள்ள நடவடிக்கைகளையிட்டு அமெரிக்கா மகிழ்ச்சியடைவதாக தெரிவித்தார்.

பொருளாதார அபிவிருத்திக்கான சவால்மிக்க சிறிலங்காவின் பயணத்தில் அமெரிக்கா துணை நிற்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

us-deligates-maithri

அமெரிக்காவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் இருதரப்பு உறவுகளை பலப்படுத்துதல் தொடர்பாகவும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

இதன்போது கருத்து வெளியிட்ட சிறிலங்கா அதிபர், புதிய அபிவிருத்தி திட்டங்களுக்காக அமெரிக்காவின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

கடந்த காலங்களில் இடைநிறுத்தப்பட்டிருந்த,சிறிலங்கா படையினருக்கான அமெரிக்காவின் பயிற்சி வாய்ப்புகள் மீண்டும் வழங்கப்பட்டுள்ளமைக்கு நன்றி தெரிவித்த சிறிலங்கா அதிபர், கடற்படையினருக்கான அமெரிக்காவின் பயிற்சிகளை அதிகரிக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.

அனைத்துலக கப்பல் போக்குவரத்து பாதையில் – புவியியல் ரீதியாக கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடத்தில் உள்ளதால், தேசிய பாதுகாப்பில் மாத்திரமன்றி பிராந்தியப் பாதுகாப்பிலும் சிறிலங்காவுக்கு முக்கிய பொறுப்பு உள்ளது என்றும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

சிறிலங்கா பாரிய அனைத்துலக முதலீட்டு உடன்படிக்கைகளை மேற்கொள்ளும் போது தேசிய பாதுகாப்பு மற்றும் பிராந்திய பாதுகாப்பு தொடர்பில் கவனம் எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *