இளவரசி டயானாவுக்கு வருங்கால இளவரசி மெர்க்கலின் அஞ்சலி

பிரித்தானியா, முக்கிய செய்திகள்

பிரித்தானியாவில் நடைபெற்ற காமன்வெல்த் தினக் கொண்டாட்டங்களில் பங்குகொண்ட இளவரசர் ஹரியின் வருங்கால மனைவியாகிய மேகன் மெர்க்கல் அணிந்து வந்த உடைகள் இளவரசி டயானாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அமைந்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

நேற்று முதன் முறையாக ராணியுடன் ஒரு அதிகாரப்பூர்வ அரசு நிகழ்ச்சியில் பங்கு கொண்ட மெர்க்கல், தனது வருங்காலக் கணவரின் தாயாகிய டயானாவுக்கு உடை வடிவமைக்கும் ஆடை வடிவமைப்பாளர்கள் வடிவமைத்த ஆடைகளை அணிந்து கொண்டு பங்கேற்றார்.

டயானாவின் ஆடைகளை வடிவமைத்த Amanda Wakeley வடிவமைத்த வெண்ணிற கோட் ஒன்றை அவர் அணிந்திருந்தார். அதேபோல் டாயானாவின் தொப்பிகளை வடிவமைத்த Stephen Jones வடிவமைத்த தொப்பி ஒன்றையும் அவர் அணிந்திருந்தார்.

இப்படி அவர் டயானாவைப் போல் ஆடையணிந்திருந்தது, டயானாவுக்கு அஞ்சலி செலுத்துவதுபோல் அமைந்ததை பலரும் கவனிக்கத் தவறவில்லை.

இந்த சூழலில் Amanda Wakeley இளவரசி டயானாவுடனான தனது முதல் சந்திப்பை நினைவு கூர்ந்தார்.

அவர் கூறுகையில், முதலில் அவர்கள் தங்கள் மோப்ப நாய்களை என் வீட்டிற்கு அனுப்புவார்கள், அதன்பின் நாம் தயாராகி விடலாம் என்று நினைத்திருந்தேன்.

ஆனால் குறித்த நேரத்திற்கு பத்து நிமிடங்கள் முன்பே அழைப்பு மணி ஒலித்தது, கதவைத் திறந்தேன்.

என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை, தனது முடியைக் கோதியவாறே இளவரசி டயானா எனது வீட்டின் வாசலின் முன்பு நிற்கிறார்.

” நான் சற்று சீக்கிரம் வந்து விட்டேன், என்னை மன்னிக்க வேண்டும், என்னை மன்னிக்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார். அன்று எங்களுக்குள் ஒரு ஆழ்ந்த நட்பு ஏற்பட்டது.

அந்த சந்திப்பு மிகவும் மகிழ்ச்சியாக அமைந்தது, நாங்கள் வெகு நேரம் பேசினோம், சிரித்தோம். அவருக்கு எல்லா உடைகளுமே அம்சமாக அமைந்தன.

ஒரே ஒரு விஷயம்தான் எனக்கு இன்னும் வருத்தத்தை அளிக்கிறது, இளவரசர் சார்லஸ் அனுப்பிய முதல் காசோலையை நான் ஒரு காப்பி கூட எடுத்து வைக்காமல் வங்கியில் செலுத்தி விட்டேன் என்பதுதான் அது” என்கிறார் Amanda.

எப்படியோ இளவரசி டயானாவுக்கு பிடித்தமான ஆடை வடிவமைப்பாளர் வருங்கால இளவரசிக்கும் ஆடை வடிவமைப்பாளராகி விட்டார். ஆனால் மெர்க்கல் இன்னொரு டயனாவாக ஆக முடியுமா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

Leave a Reply