விரிவான செய்திகள்

உலகம் உள்ளவரை வாலியின் தமிழ் வாழும் - ரஜினி அஞ்சலி !

20-Jul-2013 அன்று பிரசுரிக்கப்பட்டது

உலகம் உள்ளவரை கவிஞர் வாலியின் தமிழ் வாழும் என்று புகழஞ்சலி செலுத்தினார் நடிகர் ரஜினிகாந்த். தமிழ் சினிமாவில் பன்முகத் திறமைகளாலும் பண்பட்ட குணத்தாலும் கோலோச்சிய கவிஞர் வாலியின் மரணம், எல்லோரையும் உலுக்கிப் போட்டுள்ளது. இலக்கியம், திரையுலகம், அரசியல் என அனைத்துத் தரப்பிலிருந்தும் ஆளுமைகள் வாலிக்கு நேரில் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கவிஞர் வாலி அதிகம் பாட்டெழுதிய நாயகர்களில் ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினி. ரஜினியின் இயல்பை மனதில் வைத்து அவர் படிக்காதவன் படத்தில் எழுதிய ராஜாவுக்கு ராஜா நான்டா... பாடல் ரஜினிக்கு எப்போதும் விருப்பமான பாடல்.
 
ரஜினிக்கு சிவாஜி - தி பாஸ் வரை தொடர்ந்து பாடல் எழுதிய வாலி, அடுத்து வெளியாகவிருக்கும் கோச்சடையான் படத்திலும் பாடல் எழுதியுள்ளார். மறைந்த கவிஞர் வாலிக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார் ரஜினி. 
 
வாலி குறித்து அவர் கூறுகையில், 
 
"அவரைப் பற்றிச் சொல்ல வார்த்தைகள் வரவில்லை. உயர்ந்த மனிதர். அருமையான கவிஞர். இந்த உலகம் உள்ள வரை அவர் தமிழும் புகழும் வாழும்," என்றார்.
 

Related News
விளம்பரங்கள்